5504. | குறுகினகவசரும், மின்போல் குரை கழல் உரகரும், வன் போர் முறுகினபொழுதின், உடைந்தார் முதுகிட, முறுவல் பயின்றார்; இறுகின நிதிகிழவன் பேர் இசை கெட, அளகை எறிந்தார்; தெறுகுநர்இன்மையின், வன் தோள், தினவுற உலகு திரிந்தார். |
குறுகினகவசரும் - உடலுடன் நெருங்கி ஒட்டிய கவசங்கள் கொண்ட நிவாதகவசர் என்னும் அசுரரும்; மின்போல் குரை கழல் உரகரும் - மின்னல் போல ஒளி வீசுவனவும் ஒலிக்கின்றவையுமான வீரக் கழல்கள் அணிந்த நாகர்களும்!; வன்போர் முறுகின பொழுதில் - (இந்தக் கிங்கரர்களை எதிர்த்து) வலிய போர் முற்றியபோது; உடைந்தார் முதுகிட - தோற்றவர்களாய்ப் புறமுதுகிட்டு ஓடியதால்; முறுவல் பயின்றார் - (அவர்களின் வீரமின்மையை எள்ளிப்) புன்முறுவல் கொண்டனர் இந்தக் கிங்கரர்; இறுகின நிதி(க்) கிழவன் - செறிந்த செல்வங்களுக்கு உரியவனாகிய குபேரனின்; இசை கெட - புகழ் அழியும்படி; அளகை எறிந்தார் - அளகாபுரியைத் தாக்கி (இக் கிங்கரர்) அழித்தனர்; தெறுகுனர் இன்மையின் - தங்களை எதிர்த்துப் போர் செய்வோர் வேறு எவரும் இல்லாமையால்; வன்தோள் தினவு உற - வலிமையான தோள்கள் தினவு எடுக்கும்படி; உலகு திரிந்தார் - (எதிர்த்துப் போர் செய்வார் கிடைப்பரோ எனத் தேடி) உலகெங்கும் திரிந்தனர். கிங்கரரின்போர் ஆற்றலையும் ஆர்வத்தையும் பாடல் புலப்படுத்துகிறது. குறுகின கவசர் என்பார் நிவாதகவசர் எனப்படும் ஓர் அசுர இனத்தவராவர். இராவணன் மேற்கொண்ட திக்குவிசயத்தில் அவனை எதிர்த்துப் போரிட்டனர்; ஆற்றலில் இருவரும் சமநிலையராயிருத்தல் கண்டு நான்முகன் இரு சாராரையும் சமாதானப்படுத்தினன் என்பர் வால்மீகி. முதல் நூற் செய்தியை ஒதுக்கி நிவாதகவசரை இலங்கை அரக்கர் வென்றதாகவே கம்பர் குறிக்கிறார். 'குறுகின கவசரும்.... உரகரும்..... முதுகிட என்ற கம்பர் வாக்கைக் கருதுக. போர் செய்யும் வாய்ப்புக் கிடைக்காதபோது வீரர்களின் தோள் தினவெடுக்கும் என்பது மரபுவழிச் செய்தி. கம்பர் முன்னரும் (179, 1280, 2937) குறித்துள்ளார். 'தெறுகுநர்' என இருக்க வேண்டும்; எதுகை நலம் நாடித் 'தெறுகுனர்' என நின்றது. நிதிக் கிழவன்' ஓசை நோக்கி 'நிதிகிழவன்' என நின்றது. (16) |