5505. | 'வரைகளை இடறுமின்' என்றால், 'மறிகடல் பருகுமின்' என்றால், 'இரவியை விழவிடும்' என்றால், 'எழு மழை பிழியுமின்' என்றால், 'அரவினது அரசனை,ஒன்றோ, தரையினோடு அரையுமின்' என்றால், 'தரையினை எடும்,எடும்' என்றால், ஒருவர் அது அமைதல் சமைந்தார். |
வரைகளைஇடறுமின் என்றால் - மலைகளை இடறித் தள்ளுங்கள் என்றாலும்; மறிகடல் பருகுமின் என்றால் - அலை புரளுகின்ற கடல் நீரைக் குடித்து விடுங்கள் என்றாலும்; இரவியை விழ விடும் என்றால் - சூரியனைக் கீழே விழும்படி தள்ளிவிடுங்கள் என்றாலும்; எழு மழை பிழியுமின் என்றால் - வானத்தில் செல்லுகின்ற மேகத்தைப் பிழிந்து விடுங்கள் என்றாலும்; அரவினது அரசனை தரையினொடு அரையுமின் என்றால் - பாம்பரசனாகிய ஆதி சேடனை, தரையோடு சேர்த்து அரைத்து விடுங்கள் என்றாலும்; தரையினை எடும் எடும் என்றால் - இந்தப் பூமியைப் பெயர்த்துஎடுத்து விடுங்கள் என்றாலும்; ஒருவர் அது அமைதல் சமைந்தார் ஒன்றோ- ஒருவரே, அத் தொழிலைச் செய்து முடிக்கத்தக்கவராவர். (இவர்கள்வல்லமை) இவ்வளவு மாத்திரமேயோ ? இவர்களது வல்லமை இத்தோடுஅடங்காது என்றபடி. இயற்கையின்இயல்புகளை மாற்றுவதற்கு. அரக்க வீரர்களுள் ஒருவரே போதும். என்பது கருத்து. (17) |