5506.

தூளியின் நிமிர் படலம் போய் இமையவர் விழி துற,
                                  வெம் போர்
மீளியின் இனம்என, வன் தாள் விரை புலி நிரை
                             என, விண் தோய்
ஆளியின் அணிஎன, அன்றேல், அலை கடல்
                          விடம் என, அஞ்சார்,
வாளியின்விசைகொடு திண் கார் வரை வருவன
                          என, வந்தார்.

     தூளியின் நிமிர்படலம் போய் - (வீரர்கள்செல்வதால்) எழுந்த
புழுதியின் தொகுதி மேலே சென்று; இமையவர் விழி துற - தேவர்களின்
கண்களைத் தூர்த்துவிட; வெம் போர் மீளியின்  இனம் என  - கொடிய
போர் செய்யவல்ல பேய்களின் கூட்டம் என்னும் படியாகவும்; வன் தாள்
விரை புலி நிரை என -
வலிய கால்களால் விரைந்து செல்லும் புலிக்
கூட்டங்கள் என்னும்படியாகவும்; விண்தோய், ஆளியின் அணி என -
வானத்தில் பாய்ந்து செல்லும் சிங்கங்களின் கூட்டம் என்னும்படியாகவும்;
அன்றேல், அலை கடல் விடம் என -
அல்லாவிடில், கடலினின்றும்
தோன்றிய ஆலகால
நஞ்சு என்னும்படியாகவும்; அஞ்சா,  வாளியின் விசை
கொடு திண்கார்வரை வருவன வந்தார் -
பயப்படாமல், அம்பின்
வேகத்தோடு வலிய மேகங்கள் மலையை நோக்கி வருவன போல, (அனுமனை
நோக்கி) வந்தார்கள்.

     இமையவர் விழிதுற வந்தார் என இயையும். படலம் - தொகுதி.  (18)