5511.

மழைகளும்,மாறி கடலும், போய் மதம் அற முரசம்
                         அறைந்தார்;
முழைகளின்இதழ்கள் திறந்தார்; முது புகை கதுவ
                          முனிந்தார்;
பிழை இல படஅரவின் தோள் பிடர் உற, அடி
                          இடுகின்றார்;
கழை தொடர்வனம் எரியுண்டாலென, எறி
                          படைஞர் கலந்தார்.

     எறி படைஞர் -ஆயுதங்களைவீசத் தொடங்கிய அந்த
அரக்கவீரர்கள்; மழைகளும், மறிகடலும் போய் மதம் அற முரசம்
அறைந்தார் -
(இடிக்கின்ற) மேகங்களும் (ஒலிக்கின்ற) அலைகள்
மடங்குகின்ற கடல்களும் ஒதுங்கி, செருக்கு அற்றுவிடும்படியாக போர்
முரசங்களை அடித்து முழக்கினவர்களாய்; முழைகளின் இதழ்கள் திறந்தார்
-
குகைகள் போல வாயிதழ்களைத் திறந்தவர்களாய்; முது புகைகதுவ
முனிந்தார் -
மிக்க புகை, கம்மிக் கொள்ளும்படி பெருஞ்சினம்
கொண்டவர்களாய்; பிழை இல பட அரவின் தோள் பிடர் உற அடி
இடுகின்றார் - 
குற்ற மற்ற படங்களை உடைய ஆதிசேடனின் தோளும்
பிடரும் அழுந்தும்படி நடப்பவர்களாய்; கழை தொடர் வனம், எரி உண்டால்என கலந்தார் - மூங்கில்கள் அடர்ந்த காட்டினை நெருப்புப்
பற்றுவது போல,(நாலாபக்கமும் வளைத்துக் கொண்டு) ஒருங்கு திரண்டார்கள்.

      அரவுக்குப் பிழை இன்மையாவது, உலகின் கீழிருந்து அப்பாரத்தைச்
சுமத்தலில் பின்வாங்காதிருத்தலாகும்.                           (23)