5515. | புடையொடு விடு கனலின் காய் பொறியிடை, மயிர்கள் புகைந்தார்; தொடையொடு முதுகுதுணிந்தார்; சுழிபடு குருதி சொரிந்தார்; படை இடை ஒடிய,நெடுந் தோள் பறி தர, வயிறு திறந்தார்; இடை இடை,மலையின் விழுந்தார்-இகல் பொர முடுகி எழுந்தார். |
இகல் பொர முடுகிஎழுந்தார் - போர் செய்வதற்குவிரைந்து எழுந்த சில அரக்கர்கள்; புடையொடு விடு கனலின் காய் பொறியிடை - அனுமன் அடிக்கின்ற அடியுடனே வெளிப்படுகின்ற நெருப்பினுடைய எரிக்கின்ற தீப்பொறிகளிலே; மயிர்கள் புகைந்தார் - தம் மயிர்கள் புகையப் பெற்றனர்; தொடையொடு முதுகு துணிந்தார் - சிலர், தம் தொடைகளோடு முதுகும் துண்டிக்கப் பெற்றார்; சுழிபடு குருதி சொரிந்தார் - சுழிகள் உண்டாக இரத்தவெள்ளங்களைக் கக்கினார்கள்; படை இடை ஒடிய நெடும் தோள் பறிதர - தம் கையில் கொண்ட ஆயுதங்கள் நடுவே ஒடிந்து போக நீண்ட தோள்கள்உடலிலிருந்து வேறாகிப் போக; வயிறு திறந்தார் - தம் வயிறும் பிளக்கப்பட்டவர்களானார்கள் சிலர்; இடை இடை மலையின் விழுந்தார் - பயந்து ஓடியவர்கள், போர்க் களத்தின் இடையே பல இடங்களில் மலை போல விழுந்தார்கள். (27) |