5516.

புதைபட இருளின் மிடைந்தார், பொடியிடை நெடிது
                                  புரண்டார்;
விதைபடும்உயிரர் விழுந்தார்; விளியொடு விழியும்
                                  இழந்தார்;
கதையொடு முதிரமலைந்தார், கணை பொழி
                           சிலையர் கலந்தார்,
உதைபட உரனும்நெரிந்தார்; உதறொடு குருதி
                           உமிழ்ந்தார்.

     கதையொடு முதிரமலைந்தார் - தண்டாயுதங்களுடன்நன்றாகப்
போர்செய்தவர்களும்; கணைபொழி சிலையர் கலந்தார் - அம்புகளைச்
சொரிகின்ற விற்களை உடையவர்களும்
 கூடியவர்களாய்; உதைபட -
அனுமனால் உதைபட்டு; உரனும் நெரிந்தார் - தம்மார்பும் நெரியப்பட்டு;
உதறொடு குருதி - நடுக்கத்தோடு இரத்தத்தையும்; உமிழ்ந்தார் - வெளியே
கக்கினர்; இருளின் மிடைந்தார் - இருளைப் போன்று (கறுத்த வடிவத்துடன்)
அங்குக் கூடி நெருங்கிய சில வீரர்கள்; பொடி இடை புதை பட நெடிது
புரண்டார் -
கீழே கிடந்த புழுதியின் இடையே புதைந்து போக நெடுந் தூரம்
புரண்டனர்; விதைபடும் உயிரர் விழுந்தார் - விதைகள் போலச் சிதறிய
உயிர்களை உடையவர்களாய் வெற்றுடலாய் விழுந்திட்டார்கள்;  விளியொடு
விழியும் இழந்தார் -
சிலர், வீர ஒலியும் கண்களும்
இழந்தவர்களாயினர்.                                       (28)