5519. | வாள்கள் இற்றன; இற்றன வரி சிலை; வயிரத் தோள்கள்இற்றன; இற்றன சுடர் மழுச் சூலம்; நாள்கள் இற்றன;இற்றன நகை எயிற்று ஈட்டம்; தாள்கள் இற்றன;இற்றன படையுடைத் தடக் கை. |
வாள்கள் இற்றன- (அனுமன்தாக்கியதனால்) அரக்கர் சிலரது வாள்கள் ஒடிந்து போயின; வரி சிலை இற்றன - கட்டமைந்த விற்கள் முறிந்து போயின; வயிரத் தோள்கள் இற்றன - சிலரது வயீரம் போன்ற தோள்கள் அற்றுப் போயின; சுடர் மழுச்சூலம் இற்றன - ஒளியுள்ள மழுக்களும் சூலங்களும் முறிந்து போயின; தாள்கள் இற்றன - சிலரது கால்கள் ஒடிந்தன; நாள்கள் இற்றன நகை எயிற்று ஈட்டம் இற்றன - நட்சத்திரங்கள் விழுவதைப் போல. ஒளி விளங்கும் பற்களின் தொகுதிகள் அற்றுவீழ்ந்தன; படை உடைத்தடக்கை இற்றன - அவர்களின் ஆயுதங்களை உடைய கைகள் அற்று வீழ்ந்தன. நகை எயிறுகளுக்குநட்சத்திரங்கள் உவமை. இச்செய்யுள் சில சுவடியில் இல்லை. வருணனை மயமாகத் தொடர்ந்து மிகப் பல பாடல்கள் பாடுவது அருமையான திறனைக் காட்டுவதாகும். பாடுவது முடியுமேனும் அவற்றைப்படிப்பவர் அலுக்காமல் படிக்க வேண்டுமே ! அவ்வாறு அலுப்புத் தோன்றாவண்ணம் சந்தங்களை மாற்றி மாற்றிக் கொடுப்பதன் மூலம் சாதிக்கிறார் கவிச் சக்கரவர்த்தி. ஒரே யாப்பு வகையிலும் சொல்லாட்சி மாற்றியும் நடையை மாற்றியும் வருணனைப் பாடல்களால் ஏற்படக் கூடிய அலுப்பைக் கம்பர் தவிர்த்து விடுகிறார். முந்திய (5518) செய்யுளும் இச் செய்யுளும் ஐஞ்சீர் கொண்ட கலித்துறைகளே; ஆயினும் இச்செய்யுளின் சொல்லமைப்பையும் நடையையும் கருதிப் பார்த்து ஏனைய கலித்துறைகளோடு ஒப்பிட்டுக் காண்க. (31) |