5520.

தெறித்தவன் தலை; தெறித்தன செறி சுடர்க்
                                  கவசம்;
தெறித்த பைங்கழல்; தெறித்தன சிலம்பொடு
                                  பொலந் தார்;
தெறித்த பல்மணி; தெறித்தன பெரும் பொறித்
                                  திறங்கள்;
தெறித்தகுண்டலம்; தெறித்தன கண் மணி சிதறி.

     வன்தலை தெறித்த- சிலருடைய வலியதலைகள் அப்பால் சிதறி
விழுந்தன; செறி சுடர்க் கவசம் தெறித்தன - நிறைந்த ஒளியுள்ள கவசங்கள்
சிதறின; பைங்கழல் தெறித்த - பசும் பொன்னாலாகிய வீரக்கழல்கள் சிதறி
விழுந்தன; பொலந்தார் சிலம் பொடு தெறித்தன - பொன்னரி மாலைகள்
ஓசையோடு விழுந்தன; பல்மணி தெறித்த - (ஆபரணங்களில் அழுத்தியிருந்த)இரத்தினங்கள் பலவும் சிதறி விழுந்தன; பெரும் பொறித்
திறங்கள்தெறித்தன -
அவர்கள் அணிந்திருந்த பெரிய வீரபட்டம் முதலிய
விருதுகள்சிதறி விழுந்தன; குண்டலம் தெறித்த - அவர்களது குண்டலங்கள்
சிதறின;கண்மணி சிதறி தெறித்தன - கண்ணின் கருமணிகள் சிதறுண்டு
வீழ்ந்தன.

     சிலம்பு - ஓசை;பொறி - வீரபட்டம், விருது என்பன, 'வேந்தன்
பெயரால் பொறியும் பெற்றான்.' (சீவக சிந்தாமணி - 1792)          (32)