5524.

ஓடிக்கொன்றனன் சிலவரை; உடல் உடல்தோறும்
கூடிக் கொன்றனன்சிலவரை; கொடி நெடு மரத்தால்
சாடிக்கொன்றனன் சிலவரை; பிணம்தொறும் தடவித்
தேடிக்கொன்றனன் சிலவரை-கறங்கு எனத்
                                  திரிவான்.

     கறங்கு எனத்திரிவான் - காற்றாடி போன்றுதிரிபவனான அனுமன்;
சிலவரை உடல் உடல் தோறும் ஓடிக் கொன்றனன் - சில அரக்கர்களை,
ஒவ்வொருவர் இருக்கும் இடத்திலும் ஓடிப் போய், கொன்றான்; சிலவரை கூடி
கொன்றனன் -
சிலரை, நெருங்கிக் கொன்றான்; சிலவரை கொடி
நெடுமரத்தால் சாடிக் கொன்றனன் -
சிலரை, கொடிகள் படர்ந்த பெரிய
மரத்தினால் அடித்துக் கொன்றான்; பிணந் தொறும் தடவி சிலரைத் தேடித்
கொன்றனன் -
பிணக்குவியல்களிடையே பதுங்கிக் கிடந்த சிலரை தேடிக்
கண்டுபிடித்துக் கொன்றான்.                                   (36)