5527. | சேறும்வண்டலும் மூளையும் நிணமுமாய்த் திணிய, நீறு சேர் நெடுந்தெரு எலாம் நீத்தமாய் நிரம்ப, ஆறு போல் வரும்குருதி, அவ் அனுமனால் அலைப்புண்டு, ஈறு இல்வாய்தொறும் உமிழ்வதே ஒத்தது, அவ் இலங்கை. |
மூளையும் நிணமும்- அவ்வரக்கர்களுடைய மூளையும் கொழுப்புக்களும்; சேறும் வண்டலும் ஆய்த்திணிய - சேறும் வண்டலும் போன்று நெருங்கவும்; நீறு சேர் நெடும் - புழுதிகள் சேர்ந்த நீண்ட; தெரு எலாம் - அந்த இலங்கையின் தெருக்கள் முழுதும்; நீத்த மாய் நிரம்ப - வெள்ளமாகி நிறையவும்; ஆறு போல் வரும் குருதி - ஒரு நதியைப் போல பெருகி வருகின்ற இரத்தம்; அ அனுமனால் அலைப்புண்டு - அந்த அனுமனால் அங்கும் இங்கும் அலையும் படிதள்ளப் பட்டு; அ இலங்கை - அந்த இலங்கை நகர்; ஈறு இ்ல் வாய் தொறும் உமிழ்வது ஒத்தது - முடிவில்லாத பல வாய்களின் வழியே கக்குவதுபோல் விளங்கியது. இலங்கையில்உள்ள தெருக்கள் நீளமாக இருத்தலால், ஈறில் வாய் தொறும் எனக்கூறப் பட்டது. (39) |