அனுமன் பெரும்போர் விளைத்தல்

5528.

கருது காலினும், கையினும், வாலினும் கட்டி,
சுருதியே அன்னமாருதி மரத்திடைத் துரப்பான்;
நிருதர்,எந்திரத்து இடு கரும்பு ஆம் என நெரிவார்;
குருதி சாறு எனப்பாய்வது, குரை கடல் கூனில்.

     சுருதியே அன்னமாருதி - வேதத்தையே ஒத்த (நிலை பெறுதலும்
தவறாமையும் உடைய) அனுமன்; கருது காலினும் கையினும் வாலினும்
கட்டி -
எண்ணத்தக்க காலினாலும் கைகளினாலும் வாலினாலும் சில
அரக்கர்களைச் சேர்த்துக் கட்டி; மரத்திடைத்துரப்பான் நிருதர் - மரத்தின்
நடுவில் மோதுவதால் (அப்போது) அந்த அரக்கர்கள்; எந்திரத்து இடு கரும்பு
ஆம் என நெரிவார் -
ஆலையிலிட்டு ஆட்டுகின்ற கரும்பு போன்று உடல்
நொறுங்கிப் போனார்கள்; குருதி - (அவ்வுடலிலிருந்து பெருகுகின்ற) இரத்தம்;
சாறு என குரைகடல் கூனில் பாய்வது - கருப்பஞ்சாறு போல ஒலிக்கின்ற
கடலாகிய ஒரு மிடாவில் போய் பாய்கின்றதாகும்.

     கூன் - வாய்அகன்று உட்குழிந்த மண் பாத்திரம். இது மிடா
எனப்படும். ஆலையில், கருப்பஞ்சாறு விழுவதற்குவைக்கப் பட்டிருப்பது. 'கருப்
பேந்திரத்து ஒழுகு சாறகன் கூனை' (கம்ப. 4641). கரும்பு, அரக்கர்களுக்கும்,
கரும்பு ஆலை மரங்களின் நெருக்கத்துக்கும், கரும்புச் சாறு, உடல்களின்
இரத்தத்துக்கும், பெரும் பாத்திரம் கடலுக்கும் உவமைகளாக வந்தன.   (40)