5532.

தரு எலாம்உடல்; தெற்றி எலாம் உடல்; சதுக்கத்து
உரு எலாம் உடல்;உவரி எலாம் உடல்; உள்ளூர்க்
கரு எலாம் உடல்;காயம் எலாம் உடல்; அரக்கர்
தெரு எலாம்உடல்; தேயம் எலாம் உடல்-சிதறி.

     சிதறி, தருஎலாம் உடல் - (அனுமன் வீசிஎறி்ந்ததனால்)
நாற்புறத்தி்லும் சிதறுண்டு மரங்களில் எல்லாம் அரக்கர்களது உடல்கள்; தெற்றி
எலாம் உடல் -
தெருத்திண்ணைகளில் எல்லாம் உடல்கள்; சதுக்கத்து
உருஎலாம் உடல் -
நாற்சந்தி கூடும்
 இடங்களின் வடிவம்எல்லாம் உடல்கள்;
உவரி எலாம் உடல் - கடல்கள் எங்கும் உடல்கள்; உள் ஊர் கருஎலாம்
உடல் -
இலங்கை நகரின் நடு இடம் எல்லாம் உடல்கள்; காயம் எலாம்
உடல் -
ஆகாயம் முழுவதும் உடல்கள்; அரக்கர் தெரு எலாம் உடல் -
அரக்கர்கள் வாழும் தெருக்களில் எல்லாம் உடல்கள்; தேயம் எலாம் உடல்
-
இலங்கைப் பிரதேசம் முழுவதும் உடல்களாக நிரம்பிக் கிடந்தன.

     சதுக்கம் -நாற்சந்தி. தெற்றி - திண்ணை. அரக்கர்களது உயிர் கழிந்த
வெற்றுடம்பு, எங்கும் கிடந்தமை இங்கு கூறப்படுகின்றது.            (44)