5538.

எய்த,எற்றின, எறிந்தன, ஈர்த்தன, இகலின்
பொய்த,குத்தின, பொதுத்தன, துளைத்தன,
                              போழ்ந்த,
கொய்த, சுற்றன,பற்றின, குடைந்தன, பொலிந்த
ஐயன் மல் பெரும்புயத்தன, புண் அளப்பு அரிதால்.

     இகலில் -போரில்;எய்த எற்றின - (அவ்வரக்கர்கள்) அம்பு கொண்டு
வீசியவைகளாலும், தாக்கியவைகளாலும்; எறிந்தன ஈர்த்தன - வீசி
எறிந்தவைகளாலும் இழுத்தவைகளாலும்; பொய்த - சொரிந்தவைகளாலும்;
குத்தின பொதுத்தன -
குத்தியவைகளாலும் உள் அழுத்தியவைகளாலும்;
துளைத்தன போழ்ந்த -
துளைத்தனவற்றாலும் பிளந்தனவற்றாலும்; கொய்த
சுற்றின -
பறித்தனவாலும்  சுற்றினவாலும்; பற்றின குடைந்தன -
பிடித்தனவாலும் குடைந்தனவாலும்; பொலிந்த - விளங்கிய; ஐயன் மல்
பெரும் புயத்தன புண் அளப்பு அரிய -
சிறப்புக்குரிய அனுமனது
வலிமையில் சிறந்து விளங்கும் பெரிய தோள்களில் உண்டான விழுப்புண்கள்
அளவிடமுடியாதனவாய் மிகுந்திருந்தன.

    வினை முற்றுகளைஅடுக்கிச் சந்த நயம் விளைதல் காண்க.
வருணனையில் சலிப்பு ஏற்படாமைக்கு இதுவும் ஓர் உத்தி.           (50)