5541.

பெயர்க்கும் சாரிகை கறங்கு எனத் திசைதொறும்
                                பெயர்வின்,
உயர்க்கும்விண்மிசை ஓங்கலின், மண்ணின் வந்து
                                உறலின்;
அயர்த்துவீழ்ந்தனர், அழிந்தனர், அரக்கராய்
                                உள்ளார்;
வெயர்த்திலன்மிசை; உயிர்த்திலன்-நல் அற வீரன்.

    நல் அறவீரன் - சிறந்த தரும வீரனான  அனுமன்; பெயர்க்கும்
சாரிகை -
இடம் விட்டு விரைந்து செல்வதற்குரிய சாரிகைத் தொழிலில்;
கறங்கு என திசை தொறும் பெயர் வின் -
காற்றாடி போல எட்டுத்
திக்குகளிலும் பெயர்ந்து செல்வதாலும்; உயர்க்கும் விண்மிசை ஓங்கலின் -
ஓங்கிய ஆகாயத்தின் மீது உயரச் செல்வதாலும் ; மண்ணின் வந்து உறலின்
-
தரையில் வந்து பொருந்துவதாலும்; அரக்கராய் உள்ளார் அயர்த்து
வீழ்ந்தனர் அழிந்தனர் -
இராக்கதர்கள் சோர்ந்து வீழ்ந்து அழிந்தார்கள்;
மிசை வெயர்த்திலன் உயிர்த்திலன் -
(ஆனால் அந்த அனுமனோ)
தன்னுடம்பில், வேர்த்தல் தானும் கொண்டிலன்; பெருமூச்சு விடுதல்
செய்தானும் அல்லன்.

    சாரிகை - வட்டமாய் ஓடித் திரிதல். அனுமன் அரக்கர்களை
அழிப்பதற்குச் சிறிதும் சிரமப்படவில்லை என்பது கருத்து.           (53)