இராவணன் மீட்டும்வினாவுதல் 5547. | ஏவலின்எய்தினர் இருந்த எண் திசைத் தேவரைநோக்கினான், நாணும் சிந்தையான்; 'யாவது என்றுஅறிந்திலிர் போலுமால் ?' என்றான்- மூவகை உலகையும்விழுங்க மூள்கின்றான். |
மூவகை உலகையும்விழுங்க மூள்கின்றான் - மேல் கீழ் நடு என்ற மூன்று உலகங்களையும் விழுங்குவான் போன்று சினத்தால் மிக்க இராவணன்; ஏவலின் எய்தினர் இருந்த எண் திசைத் தேவரை நோக்கினான் - தன் கட்டளையால் வந்தவர்களாய் அருகே நின்று கொண்டிருந்த எட்டுத் திக்குப் பாலர்களைப் பார்த்து; நாணும் சிந்தையான் - மிகவும் வெட்கம் கொண்ட மனமுடையவனாகி; யாவது என்று அறிந்திலிர் போலும் என்றான் - (பருவத்தேவர்களைப் பார்த்து) என்ன நடந்தது என்றே தெரிந்து கொள்ளவில்லை போலும் என்று அதட்டிக் கூறினான். (59) |