சம்புமாலியுடன்சென்ற படைகள் | 5552. | தன்னுடைத்தானையோடும், தயமுகன், 'தருக' என்று ஏய மன்னுடைச்சேனையோடும், தாதை வந்து ஈந்த வாளின் மின்னுடைப்பரவையோடும், வேறுளோர் சிறப்பின் விட்ட பின்னுடைஅனிகத்தோடும், பெயர்ந்தனன், - பெரும் போர் பெற்றான். |
பெரும்போர்பெற்றான் - பெரிய போர் செய்யும்பேறுபெற்ற சம்புமாலி; தன்னுடைத் - தனக்கு உரியதான; தானையோடும் - சேனையுடனும்; தயமுகன் - பத்து முகங்களை உடைய இராவணன்; தருகஎன்று ஏய - 'அழைத்து வருக' என்று ஏவப்பட்ட; மன்னுடைச் சேனையோடும் - மன்னனுக்கே உரிய சேனைகளுடனும்; தாதை வந்து ஈந்த - தன் தகப்பன் பிரகஸ்தன் கொண்டு வந்து கொடுத்த; வாளின் முன்னுடைப் பரவையோடும் - வாளினால் விளக்கம் பெற்ற சேனைக் கடலுடனும்; வேறு உளோர் - மற்றும் உள்ளவர்களான நண்பர்கள்; சிறப்பின் விட்ட - மிகுதியாக அனுப்பிய; பின்னுடை அனிகத்தோடும் - பின்னே காவலாக வந்த சேனைகளுடனும்; பெயர்ந்தனன் - சென்றான். பிரகத்தன்,இராவணனுடைய தலைமை அமைச்சன். இவன் மைந்தன் சம்புமாலி. (3) |