5556. | எத்தியஅயில், வேல், குந்தம், எழு, கழு முதல ஏந்தி, குத்தியதிளைப்ப; மீதில் குழுவின மழை மாக் கொண்டல் பொத்து உகு பொருஇல் நல் நீர் சொரிவன போவ போல, சித்திரப்பதாகை ஈட்டம் திசைதொறும் செறிவ செல்ல; |
எத்திய அயில்வேல் குந்தம் - தாக்கி எறியப்பட்டகூர்மையான வேல்கள் எறியீட்டிகள்; எழு, கழு முதல ஏந்தி - இரும்புத்தடிகள் கழுக்கள் முதலிய ஆயுதங்களைத் தரித்து; குத்திய திளைப்ப - குத்தித் திளைப்பதால்; மீதில் குழுவின மழை - மேலே கூடியிருந்த மழையை; மாக்கொண்டல் - பொழியக்கூடிய பெரும் இருண்ட மேகங்கள்; பொத்து உகு பொரு இல் நல் நீர் சொரிவன போவபோல - குத்தப்பட்டுச் சிந்தும் ஒப்பில்லாத நல்ல நீரைச் சொரிவனவாய்ச் செல்வன போல; சித்திரப் பதாகை ஈட்டம் - அழகுள்ள கொடிகளின் கூட்டம்; திசைதொறும் செறிவ செல்ல - எல்லாத் திக்குகளிலும் நெருங்கப் பெற்றனவாய்ச் செல்லவும். 'பல்லியம்துவைப்ப' என அடுத்தகவியோடு தொடரும். 'எற்றிய' என்பது படைகள் ஏந்திச் சென்ற மிகுதியான கொடிகள் அசைந்து செல்லும் காட்சி உயர்வு நவிற்சியாகப் புனையப்பட்டுள்ளது. வீரர்களின் படைக்கலங்கள் குத்திக் குடைந்ததால் மேகங்கள் சொரிந்த நீர்ப் பொழிவுபோல அந்தக்கொடிகள் விளங்கினவாம். படைக்கலங்களின் மிகுதியும் நீட்டமும் குறிக்கப்பட்டன. மேகங்கள் சொரிவனபோல் கொடிகள் சொரிந்தன என்பதும் மிகுதி குறித்த கற்பனையே. (7) |