5565. | கேழ் இருமணியும் பொன்னும், விசும்பு இருள் கிழித்து நீங்க, ஊழ் இருங்கதிர்களோடும் தோரணத்து உம்பர் மேலான், சூழ் இருங்கதிர்கள் எல்லாம் தோற்றிடச் சுடரும் சோதி, ஆழியின் நடுவண்தோன்றும் அருக்கனே அனையன் ஆனான். |
கேழ் இருமணியும் பொன்னும் - நல்ல நிறமுள்ள பெரிய இரத்தினங்களும், பொன்னும்; விசும்பு இருள் கிழி்த்து நீங்க - வானில் உள்ள இருளைப் பிளந்து நீங்கிட; ஊழ் இருங்கதிர்களோடும் - முறை முறையே தோன்றுகின்ற (இரத்தினம், பொன்) மிக்க கிரணங்களோடும் கூடிய; தோரணத்து உம்பர் மேலான் - அத்தோரண வாயிலின் மேல் ஏறி நின்ற அனுமன்; சூழ் இருங்கதிர்கள் எல்லாம் தோற்றிட - தன்னைச் சூழ்ந்த பெருங் கிரணங்கள் யாவும் தோன்றி விளங்க; ஆழியின் நடுவண் தோன்றும் - கடலின் நடுவில் விளங்குகின்ற; சுடரும் சோதி அருக்கனே அனையன் ஆனான் - விளங்குகின்ற பேரொளியை உடைய சூரியனை ஒத்தவன் ஆனான். தோரணத்துஉம்பர் மேலான் (அனுமன்) அருக்கன் (சூரியன்) அனையன் ஆனான். தோரணத்துக்குக் கடலும், மேலிடத்திருந்த அனுமனுக்குச் சூரியனும் உவமையாயின. தோரணம் - தோரண வாயில். அனுமனுக்குக் கதிரவனை முன்னும் (4768) உவமையாக்கினார். (16) |