கலிவிருத்தம்                     

 5572.

கருங் கடல்அரக்கர்தம் படைக்கலம் கரத்தால்
பெருங் கடல்உறப் புடைத்து, இறுத்து, உக,
                               பிசைந்தான்;

விரிந்தனபொறிக் குலம்; நெருப்பு என வெகுண்டு,
                           ஆண்டு
இருந்தவன்,கிடந்தது ஓர் எழுத் தெரிந்து எடுத்தான்.

     ஆண்டு இருந்தவன்- அந்தத்தோரணத்தின் மீது இருந்த அனுமன்;
கரத்தால் - (தனது) கைகளாலே; கருங்கழல் அரக்கர் தம் படைக்கலம் -
பெரிய வீரக் கழலணிந்த அந்த அரக்க வீரர்கள் எறிந்த ஆயுதங்களை;
பெருங்கடல் உற புடைத்து இறுத்து - பெரிய கடலில் போய் விழும் படி
அடித்தும், முறித்தும்; உகபிசைந்தான் - சிதறிப் போகும்படி பயன்படாத
வகையில் அழித்தெறிந்தான்; பொறிக் குலம் விரிந்தன - (அச்செய்கையால்)
வண்டுகளின் கூட்டம் எங்கும் பரவலாயின; நெருப்பு என வெகுண்டு -
(அப்போது அவன்) பற்றி எரிகின்ற தீயைப் போலப் பெருங்கோபம் கொண்டு;
கிடந்தது ஓர் எழு தெரிந்து எடுத்தான் - அங்குக் கிடந்த ஒரு இரும்புத்
தடியைத் தேர்ந்து எடுத்துக்கொண்டான்.

     அனுமன்போர்க்களத்தில் செய்த வீரச் செயல் கூறப்பட்டது. பொறி -
வண்டு; ஆகுபெயர். 'பொறிக்குலம் எழ' (5429) என முன்னும் வந்தது. (23)