| 5576. | நெரிந்தனதடஞ் சுவர்; நெரிந்தன பெரும் பார்; நெரிந்தன நுகம்புடை; நெரிந்தன அதன் கால்; நெரிந்தனகொடிஞ்சிகள்; நெரிந்தன வியன் தார்; நெரிந்தன கடும்பரி; நெரிந்தன நெடுந் தேர். |
தடம் சுவர்நெரிந்தன - (வீரர்கள் ஏறிவந்ததேர்களினுடைய) சுற்றுப் புறங்கள் நொறுங்கிப் போயின; பெரும்பார் நெரிந்தன - பெரிய அச்சுக் கட்டைகள் நொறுங்கிப் போயின; நுகம் புடை நெரிந்தன - நுகத்தடிகள் பக்கங்களிலே நொறுங்கி்ப் போயின; அதன்கால் நெரிந்தன - அத்தேர்களின் சக்கரங்கள் நொறுங்கிப் போயின; கொடிஞ்சிகள் நெரிந்தன - மேல் தட்டுகள்நொறுங்கிப் போயின; வியன்தார் நெரிந்தன - சிறந்த மாலைகள் நொறுங்கிப்போயின; கடும்பரி நெரிந்தன - அவற்றில் பூட்டப்பட்டுள்ள வேகமானகுதிரைகள் அழிந்து போயின; நெடும் தேர் நெரிந்தன - (முடிவாகப்) பெரியதேர்களே நொறுங்கிப் போயின. தேர்ப்படையின்அழிவு கூறப்பட்டது. தேரின் பல உறுப்புக்கள் கூறப்பட்டுள்ளன. நுகம் - (குதிரைகளைப் பூட்டுவதற்குரிய) குறுக்குக் கட்டை. கொடிஞ்சி; தாமரை வடிவமாகப் பண்ணித் தேரின் முன்னே நடப்படுவதோர் உறுப்பு. கால் - சக்கரம்; பார் - தேரின் அடிப்பாகத்தில் உள்ள நெடுஞ் சட்டம். (27) |