5577.

ஒடிந்தன;உருண்டன; உலந்தன; புலந்த;
இடிந்தன;எரிந்தன; நெரிந்தன; எழுந்த;
மடிந்தன;மறிந்தன; முறிந்தன; மலைபோல்,
படிந்தன;முடிந்தன; கிடந்தன-பரி மா.

     பரிமா - வீரர்கள்ஏறிவந்த குதிரைப் படைகள்; ஒடிந்தன உருண்டன
உலந்தன -
சில உடலுறுப்புக்கள் ஒடியப்பட்டுக் கீழே விழுந்து உருண்டு
இறந்தன; புலந்த -  துன்பப்பட்டன; இடிந்தன எரிந்தன நெரிந்தன - சில
இடிந்து எரிந்து நொறுங்கித் தூளாகப் போயின; எழுந்த - மேலே கிளம்பின;
மடிந்தன மறிந்தன முறிந்தன - 
சில குதிரைகள் எழும் போது, அவற்றின்
கால்கள் மடிப்புண்டும்,
 முன்பின்னாகத்திருப்பப் பட்டும் முறிந்து போயின;
மலை போல் படிந்தன முடிந்தன கிடந்தன -
(இவ்வாறு பல குதிரைகள்
இந்திரனால் இறகு முறிக்கப்பட்ட) மலைபோல (தம்முடையகதி) முடியப் பெற்று
கீழே விழுந்து கிடந்தன.

     குதிரைப்படைகளின் அழிவு கூறப்பட்டது. தார் - கிண்கிணிமாலை. (28)