5579. | கரிகொடுகரிகளைக் களப் படப் புடைத்தான்; பரிகொடுபரிகளைத் தலத்திடைப் படுத்தான்; வரி சிலை வயவரைவயவரின் மடித்தான்; நிரை மணித்தேர்களைத் தேர்களின் நெரித்தான். |
கரி கொடுகரிகளை களப்படப் புடைத்தான் - (அனுமன்) யானைகளைக் கொண்டே, யானைகளைப் போர்க்களத்தில் இறந்து விழும்படி அடித்துக் கொன்றான்; பரி கொடு பரிகளைத் தலத்திடைப் படுத்தான் - குதிரைகளைக் கொண்டே குதிரைகளைத் தரையில் வீழ்த்தி அழித்தான்; வரி சிலை வயவரை வயவரின் மடித்தான் - கட்டமைந்த வில்லை உடைய வீரர்களை அவ்வீரரில் சிலரை எடுத்து விட்டெறிந்து அழித்தான்; நிரை மணித் தேர்களை தேர்களின்நெரித்தான் - வரிசையாக மணிகள்கட்டிய தேர்களை (அவ்வாறான) தேர்களைக் கொண்டே அழித்துக் குவித்தான். இது, நால்வகைச்சேனைகளையும் அவ்வச் சேனைகளையே தன் போர்க் கருவியாகக் கொண்டு அனுமன் அழித்ததைக் கூறுவது. வெவ்வேறு வினைமுற்றுகள் கொண்டு, அழித்தலாகிய ஒரு முடிபைக் காட்டிய நயம் உணரத்தக்கது. மேலும், செயலின் கொடுமையை வினைமுற்றுகளின் வல்லோசை குறிப்பாகப் புலப்படுத்தியதும் காணத்தக்கது. (30) |