5582.

புகை நெடும்பொறி புகும் திசைதொறும்
                         பொலிந்தான்;
சிகை நெடுஞ்சுடர் விடும் தேர்தொறும் சென்றான்;
தகை நெடுங்கரிதோறும், பரிதொறும், சரித்தான்;
நகை நெடும்படைதொறும், தலைதொறும், நடந்தான்.

     புகை நெடும்பொறி புகும் திசை தொறும் பொலிந்தான் -
புகையோடுகூடிய நீண்ட நெருப்புப் பொறி (சினத்தீ) செல்லும் இடங்களில்
எல்லாம் சென்று விளங்குபவனாகிய அனுமன்; சிகை நெடும் சுடர் விடும்
தேர்தொறும் சென்றான் -
சிகரங்களினின்று நீண்ட ஒளி விடும் தேர்கள்
இருக்குமிடம் எல்லாம் சென்றான்; தகை நெடும் கரிதொறும் பரிதொறும்,
சரித்தான் -
சிறப்பமைந்த பெரிய யானைகள் குதிரைகள் இருக்கும்
இடங்களில் எல்லாம் சஞ்சரித்தான்; நகை நெடும் படை தொறும் -
(தன்னைப் பார்த்து அற்பக்குரங்கு என்று) ஏளனம் செய்து சிரித்த போர்ப்
படைகள் தோறும்; தலை தொறும் நடந்தான் - அப்படையில் உள்ள
வீரர்கள் தலை தோறும் நடந்து சென்று அவர்களை அழித்தான்.

    பொலிந்தான்;வினையாலணையும் பெயர். (பொலிந்தவன்)        (33)