5584.

பிரிவு அரும் ஒரு பெருங் கோல் என, பெயரா
இருவினைதுடைத்தவர் அறிவு என, எவர்க்கும்
வரு முலை விலைக்குஎன மதித்தனர் வழங்கும்
தெரிவையர் மனம்என, கறங்கு என,-திரிந்தான்.

     பிரிவு அரும் ஒருபெருங் கோல் என - (அப்போது அனுமன்)
நீங்காது நிலையாக நடைபெறும் ஒப்பற்ற செங்கோல் போலவும்; பெயரா இரு
வினை துடைத்தவர் அறிவு என -
நீங்காத புண்ணியம் பாவம் என்ற இரு
வினைகளை அழித்த பெரியோரது ஞானம் போலவும்; எவர்க்கும் - (இன்னார்
இனியார் என்று பாராமல்) யாவர்க்கும்; வரு முலை விலைக்கு என
மதித்தனர் -
தம் வளர்ந்து வரும் முலைகளை அவர்கள் கொடுக்கும் விலைப்
பொருளுக்கே என்று தீர்மானித்தவர்களாய்; வழங்கும் தெரிவையர் மனம்
என -
பொருளுக்குத் தக்கபடி அளித்து வரும் விலைமகளிர் மனத்தைப்
போலவும்; கறங்கு என - காற்றாடியைப் போலவும்; திரிந்தான் -
(அரக்கரைக் கொல்லுமாறு) திரிந்து கொண்டிருந்தான்.

    பிரிவு அரும்பெருங் கோல் என அரசனுடைய செங்கோல் உறங்காது
உலகெங்கும் சென்று ஆணை செலுத்தும். 'உறங்கு மாயினும் மன்னவன்
தன்னொளி கறங்கு தெண்டிரை வையகம் காக்குமால்' - (சீவக சிந்தாமணி 248)
என்று ஆட்சித் தத்துவம் காலம் இடம் ஆகியவற்றில் இடையீடு இன்றி
நிலவுவதைத் திருத்தக்க தேவர் குறித்தமை காண்க. பொன்விலை மகளிர் மனம்
எனக் கீழ்போய் (106) என முன்னரும் விலைமகளிர் மனத்தின் கீழ்மை
குறிக்கப்பட்டது. தாடகை வதைப் படலத்தில் 'முத்தியில் போவது புரிபவர்
மனமும் பொன் விலைப் பாவையர் மனமும் போல் (353) என்ற வரிகளில்
ஞானியர், பரத்தையர் இருவர் நிலையும் இப்பாடலிற்போலவே ஒருங்கு
இணைத்துக் காட்டப்பட்டன.                                          (35)