அண்ணல்-அவ் அரியினுக்கு அடியவர் அவன் சீர் நண்ணுவர் எனும்பொருள் நவை அறத் தெரிப்பான், மண்ணினும்,விசும்பினும், மருங்கினும், வலித்தார் கண்ணினும்,மனத்தினும்,-தனித் தனி கலந்தான்.
அண்ணல் -பெரியோனாகிய அனுமன்; அவ் அரியினுக்கு அடியவர் - அந்தத் திருமாலுக்கு அடியவர்கள்; அவன் சீர் நண்ணுவர் எனும் பொருள் - அவனுக்குரிய சிறப்புக்களை அடைவர் என்று கூறப்படும் சாத்திரப் பொருளை; நவை அறத் தெரிப்பான் - குற்றமில்லாமல் (செவ்வனே) தெரி்விப்பவனாய்; மண்ணினும் விசும்பினும் மருங்கிலும் - பூமியிலும் வானத்திலும் பக்கங்களில் உள்ள திக்குகளிலும்; வலித்தார் - வலிமை கொண்டு போரிட்ட அரக்கர்களுடைய; கண்ணினும் மனத்தினும் - கண்ணுக்கு எதிரிலும் மனத்திலும்; தனித்தனி கலந்தான் - ஒவ்வொருவரிடமாகவும் கலந்து விளங்கினான். (36)