5586. | கொடித்தடந் தேரொடும் குரகதக் குழுவை அடித்து, ஒரு தடக்கையின் நிலத்திடை அரைத்தான்; இடித்து நின்றுஅதிர் கதத்து, எயிற்று வன் பொருப்பை, பிடித்து, ஒருதடக் கையி்ன், உயிர் உகப் பிழிந்தான். |
குரகதக் குழுவை -குதிரைக்கூட்டங்களை; கொடித் தடம் தேரொடும் - கொடி கட்டிய பெரிய தேர்களோடும்; ஒரு தடக் கையின் அடித்து - ஒரு பெரிய கையால் அடித்து; நிலத்திடை அரைத்தான் - தரையிலே தேய்த்தான்; கதத்து இடித்து நின்று அதிர் - சினத்தினால் கர்ச்சித்து நின்று பேரொலி செய்கின்ற; எயிற்றுவன் பொருப்பை - தந்தங்களை உடைய வலியமலை போன்ற யானைகளை; ஒரு தடக்கையின் பிடித்து - மற்றொரு பெரிய கையினால் பிடித்து; உயிர் உகப் பிழிந்தான் - அவற்றின் உயிர் சிந்தப் பிழிந்து கொன்றான். பொருப்பு; யானை. உவமை ஆகுபெயர். எயிற்று வன் பொருப்பு எனத் தந்தங்களை உடைய மலை என யானையை உருவகித்தார். (37) |