5587.

கறுத்து எழுநிறத்தினர், எயிற்றினர், கயிற்றார்,
செறுத்து எரிவிழிப்பவர், சிகைக் கழு வலத்தார்,

மறுத்து எழுமறலிகள் இவர் என அதிர்ந்தார்,
ஒறுத்து,உருத்திரன் என, தனித் தனி உதைத்தான்.

     கறுத்து எழுமனத்தினர் - கோபித்து எழுகின்றமனத்தை
உடையவர்களும்; எயிற்றினர் - கோரப் பற்களை உடையவர்களும்; கயிற்றார்
-
பாசம் என்னும் ஆயுதத்தைக் கொண்டவர்களும்; செறுத்து எரி விழிப்பவர்
-
பகைத்து நெருப்புப் போல விழிப்பவர்களும்; சிகைக் கழு வலத்தார் -
கூரிய கழு என்னும் படை வலிமை உடையவர்களும்; இவர் மறுத்து எழு
மறலிகள் என அதிர்ந்தார் -
இவர்கள் பகைமை பாராட்டிக் கிளம்புகின்ற
யமன்களே என்னும்படி பெரு முழக்கம் செய்பவர்களுமான அரக்க வீரரை;
ஒறுத்து - கடிந்து; உருத்திரன் என - உருத்திர மூர்த்தியைப் போல; தனித்
தனி உதைத்தான் -
அனுமனும் ஒவ்வொருவராக உதைத்துக் கொன்றான்.

     மார்க்கண்டேயர்பொருட்டு, சிவபிரான் யமனைத் தன் திருவடியால்
உதைத்து  அழித்ததைக் குறிக்கொண்டு, அனுமன், உருத்திரன் எனப்பட்டான்.
கயிறு - பாசப் படை; சிகைக்கழு - நுனி கூரிய கழுப்படை.          (38)