5589. | எட்டின விசும்பினை;-எழுப் பட எழுந்த- முட்டின மலைகளை;முயங்கின திசையை; ஒட்டின ஒன்றைஒன்று; ஊடு அடித்து உதைந்து தட்டுமுட்டு ஆடின,தலையொடு-தலைகள். |
எழுபட எழுந்ததலைகள் - (அனுமன் வீசிய) எழுஎன்னும் ஆயுதம் பட்டதனால் (உடலை விட்டு வேறாகி) எழுந்தனவான அரக்கர்களின் தலைகள்; விசும்பினை எட்டின - ஆகாயத்தை அளாவினவும்; மலைகளை முட்டின - மலைகளின் மீது மோதியனவும்; திசையை முயங்கின - திக்குகளைத் தழுவியனவும்; ஒன்றை ஒன்று ஒட்டின - ஒன்றோடு ஒன்று சேர்ந்தனவுமாகி; ஊடு அடித்து உதைந்து - போர்க்களத்தில் அடிபட்டுத் தள்ளப்பட்டு; தலையொடு தட்டு முட்டு ஆடின - (முன்னமே போர்க்களத்தில்) விழுந்து கிடந்த) தலைகளோடு தட்டு முட்டுப் பொருள் போல அங்கும் இங்கும் சிதறிக் கிடந்தன. (40) |