சம்புமாலிசினத்தோடு போருக்கு விரைதல்

                அறுசீர்ஆசிரிய விருத்தம்

5590.

கானே காவல் வேழக் கணங்கள் கத வாள் அரி
                          கொன்ற
வானே எய்த,தனியே நின்ற மத மால் வரை
                          ஒப்பான்,
தேனே புரை கண்கனலே சொரிய, சீற்றம்
                          செருக்கினான்,
தானேஆனான்-சம்புமாலி, காலன் தன்மையான்.

     காலன்தன்மையான் சம்பு மாலி - யமன் போன்ற கொடிய
தன்மையனாகிய சம்புமாலி; கத(ம்)வாள் அரி கொன்ற - கோபம் உள்ள ஒளி
தங்கிய சிங்கத்தினால் கொல்லப்பட்டனவாய்; கானே காவல் வேழம்
கணங்கள் வானே எய்த -
காட்டையே தங்கட்கு உரிய வாழிடமாகக்
கொண்ட யானைக் கூட்டங்கள் விண்ணுலகம் சேர (இறக்க); தனியே நின்ற
மதமால் -
தனிப்பட்டு நின்ற; வரை ஒப்பான் - மத மயக்கம் கொண்ட
யானையை ஒத்து; தானே ஆனான் - (தன்னோடு வந்தவரெல்லாம் இறக்க)
தான் ஒருவனே எஞ்சி நின்றவனாய்; தேனே புரை கண் கனலே சொரிய

- தேனை ஒத்துச்சிவந்த கண்கள் நெருப்புப் பொறியை வெளிப்படுத்த; சீற்றம்
செருக்கினான் -
கோபம் மிக்கவனானான்.                        (41)