5591.

காற்றின் கடிய கலினப் புரவி நிருதர் களத்து
                          உக்கார்;
ஆற்றுக் குருதிநிணத்தோடு அடுத்த அள்ளல்
                         பெருங் கொள்ளைச்
சேற்றில்செல்லாத் தேரின் ஆழி ஆழும்; நிலை
                         தேரா,
வீற்றுச்செல்லும் வெளியோ இல்லை; அளியன்
                         விரைகின்றான்.

     காற்றின் கடியகலினப் புரவி நிருதர் - காற்றினும் விரைந்து
செல்வனவான, கடிவாளம் பூட்டிய குதிரை வீரர்களான அரக்கர்கள்; களத்து
உக்கார் -
போர்க்களத்தில் மாண்டார்கள்; குருதி ஆற்று நிணத்தோடு
அடுத்த -
இரத்த ஆற்றில் கொழுப்புகளோடு சேர்ந்த; அள்ளல் பெருங்
கொள்ளைச் சேற்றில் -
நெருங்கிய மிகப் பெரிய சேற்றில்; செல்லாத்
தேரின் ஆழி -
ஆழும் போக முடியாத, தேரினது சக்கரங்கள் அமிழ்ந்து
போகும்; நிலை தேரா - அப்படிப் புதைகின்ற தன்மையை உணர்ந்தும்;
வீற்றுச் செல்லும் - (அவ்விடத்தைவிட்டு) தனிமையோடு செல்லக் கூடிய;
வெளியோ இல்லை - வெற்றிடமோ இல்லை (இவ்வாறு இருக்கவும்);
விரைகின்றான் - போருக்கு அந்தச் சம்புமாலி விரைந்து செல்பவனானான்;
அளியன் - இவன் மிகவும் இரங்கத்தக்கவன்.                     (42)