| 5593. | 'நன்றி, நன்று, உன் கருணை !' என்னா, நெருப்பு நக நக்கான்; 'பொன்றுவாரின்ஒருவன் என்றாய் போலும் எனை' என்னா, வன் திண்சிலையின் வயிரக் காலால், வடித் திண் சுடர் வாளி, ஒன்று, பத்து,நூறு, நூறாயிரமும், உதைப்பித்தான். |
உன் கருணை நன்றுநன்று என்னா - (சம்புமாலி அனுமனைநோக்கி)நீ என் மீது காட்டும் இரக்கம் மிகவும் நன்றாக இருக்கிறது என்று சொல்லி; நெருப்பு நக நக்கான் - நெருப்புப் பெருகி வரச் சிரித்து; எனைப் பொன்று வாரின் ஒருவன் என்றாய் போலும் என்னா - என்னைப்போரில் இறப்பவருள் ஒருவன் என்று எளிதாக நினைத்தாய் போலும் என்றுகூறி; வன் திண் சிலையின் வயிரக் காலால் - மிக வலிய தன் வில்லின்வயிரம் போன்று உறுதியான தண்டினால்; வடிதிண் சுடர் வாளி - கூர்மைவாய்ந்த வலிய ஒளி வீசும் அம்புகளை; ஒன்று பத்து, நூறு நூறாயிரமும் -ஒன்றும், பத்தும், நூறும் நூறாயிரமும் என்ற கணக்குப் படி; உதைப்பித்தான் -(அனுமன் மீது) செலுத்தினான். நன்று நன்று;அடுக்கு இகழ்ச்சிப் பொருளது. நகுதல் - பெருகுதல் என்னும் கருத்தில் வந்தது. வன் திண்: ஒரு பொருட் பன்மொழி உதைத்தல் - வலிந்து செலுத்துதல். (44) |