சலித்தான்ஐயன்; கையால், எய்யும் சரத்தை உகச் சாடி, ஒலித் தார்அமரர் கண்டார் ஆர்ப்ப, தேரினுள் புக்கு, கலித்தான்சிலையைக் கையால் வாங்கி, கழுத்தினிடை இட்டு வலித்தான், பகுவாய் மடித்து மலைபோல் தலை மண்ணிடை வீழ.
ஐயன் சலித்தான்- அனுமன்(தன் கையிலிருந்த எழு அறுத்து வீழ்த்தப்பட்டதனால்) சிறிது சலிப்படைந்து; கையால் எய்யும் சரத்தை உகச் சாடி - (உடனே) சம்புமாலி தன்மீது எய்கின்ற அம்புகளை எல்லாம் தன் கைகளாலேயே உதிர்ந்து போம்படி மோதித்தள்ளி; ஒலித்தார் அமரர் கண்டார் ஆர்ப்ப - தழைத்தலை உடைய மாலையை அணிந்த தேவர்கள் கண்டு ஆரவாரம் செய்ய; தேரினுள் புக்கு - சம்பு மாலியின் தேரினுள்ளே பாய்ந்து புகுந்து; கலித்தான் சிலையை - வீரவொலி செய்து கொண்டிருந்த அவனது வில்லை; கையால் வாங்கி பகுவாய் மடித்து - தன் கையால் எளிதில் பற்றி தன் திறந்த வாயை மடித்துக் கொண்டு; மலைபோல் தலை - மலை போன்ற அவன் தலை; மண் இடை வீழ - தரையில் விழுமாறு; கழுத்திடை இட்டு வலித்தான் - அவனது கழுத்திலே மாட்டி இழுத்தான்.