5597. | குதித்து,தேரும், கோல் கொள் ஆளும், பரியும், குழம்பு ஆக மிதித்து,பெயர்த்தும், நெடுந் தோரணத்தை வீரன் மேற்கொண்டான்; கதித் துப்புஅழிந்து கழிந்தார் பெருமை கண்டு, களத்து அஞ்சி, உதித்துப்புலர்ந்த தோல்போல் உருவத்து அமரர் ஓடினார். |
வீரன் குதித்து -அனுமன்தேரினின்றும் கீழே குதித்து; தேரும் கோல்கொள் ஆளும் - சம்பு மாலியின் தேரும், அதனை ஓட்டும் கோலைக் கொண்டு செலுத்தும் தேர்ப்பாகனும்; பரியும், குழம்பு ஆகமிதித்து - தேரில் பூட்டிய குதிரைகளும் குழம்பு போல இளகி ஓடத் தன் கால்களால் மிதித்து அழித்துவிட்டு; பெயர்த்தும் - மீண்டும்; நெடுந்தோரணத்தை மேற்கொண்டான் - தான் முன்னிருந்த நெடிய தோரண வாயிலின் மீது ஏறிக் கொண்டான்; உதித்துப் புலர்ந்த தோல் போல் உருவத்து அமரர் - பருத்துக் காய்ந்து போன தோல் போன்ற உருவத்தை உடைய பருவத் தேவர்கள்; கதித்துப்பு அழிந்து கழிந்தார் - விரைவுள்ள (தமது) வலிமை யழிந்து இறந்து போன; பெருமை கண்டு - அரக்கரது பெருந் தொகையைப் பார்த்து; அஞ்சி - (இச் செய்தியை இராவணனிடம் சொல்ல வேண்டுமே என்று) பயந்து; களத்து ஓடினார் - போர்க்களத்தினின்றும் இராவணன் அரண்மனையை நோக்கி விரைந்து ஓடினார். வீரன் குதித்து,தேர், ஆள், பரி குழம்பாக மதித்து பெயர்த்தும் நெடுந் தோரணத்தை மேற் கொண்டான். ஏற்கனவே இறந்தவர்களின் பெருந் தொகை கண்டு, அஞ்சி காவல் அமரர் இராவணனிடம் சொல்வதற்கு ஓடினார்கள். காற்றை உட்கொண்டு பருத்தும், பின் சிறுத்தும் மாறும் துருத்தித் தோல், காவலில் குறையற்ற போது பருத்தும், குறையுற்றபோது தளர்ந்தும் போகின்ற காவல் தேவர்களுக்கு உவமை ஆயிற்று. (48) |