கலித்துறை

5601.

சிலந்திஉண்பது ஓர் குரங்கின்மேல் சேறியேல்,
                              திறலோய் !
கலந்த போரில்நின் கண்புலக் கடுங் கனல் கதுவ,
உலந்த மால் வரைஅருவி ஆறு ஒழுக்கு அற்ற
                              ஒக்கப்
புலர்ந்த மாமதம் பூக்கும் அன்றே, திசைப் பூட்கை ?

     திறலோய் - (சேனைத்  தலைவர்  இராவணனை  நோக்கி) வலிமை
வாய்ந்தவனே! (நீ); சிலந்தி உண்பது ஓர் குரங்கின் மேல் சேறியேல் -
சிலந்திப் பூச்சியைப் பிடித்துத் தின்னும் ஒரு குரங்கின் மேல் போர் செய்யப்
போவாயானால்; திசைப் பூட்கை - எட்டுத் திக்கு யானைகள்; கலந்த போரில்- நீ எதிர்த்துப் புரிந்த போரில்; நின் கண் புலன் - உனது
கண்களிலிருந்து;கடும் கனல் கதுவ - கொடிய நெருப்புப் பொறி பறக்க;
உலந்த மால் வரை- கோடை வெயிலால் காய்ந்து போன பெரிய மலையில்;
அருவி ஆறுஒழுக்கு அற்று ஒக்க - அருவிகள் தம் வழியே செல்லும்
ஓட்டம் அற்றுப்போனது போல; புலர்ந்த மாமதம் - (உன்னால் அடிபட்டு
வலிமைகுறைந்தமையால்) அற்றுப் போன மிக்க மதநீர்; பூக்கும் அன்றே -
மீண்டும்தோன்றப் பெறும் அல்லவா ?

     அருவி ஆறுவற்றிப் போன மலைக்கு மதம் அடங்கிய திக்கு
யானைகள் உவமை. ஒரு குரங்கை எதிர்த்து இராவணன் போருக்குச்
சென்றால், அது அவனது ஆற்றலின் குறைவைத் தெரிவிக்கும். முன் தோற்ற
அந்த யானைகள், இப்போது அவனை இழிவாகக் கருதி
 மகிழ்ச்சியினால்,மதச்
செருக்குக் கொள்ளும், என்று சேனைத் தலைவர் கூறினார்கள்.         (1)