5612. | கூய்த்தரும்தொறும், தரும்தொறும், தானை வெங் குழுவின் நீத்தம், வந்துவந்து, இயங்கிடும் இடன் இன்றி நெருங்க, காய்த்து அமைந்தவெங் கதிர்ப் படை, ஒன்று ஒன்று கதுவி, தேய்த்துஎழுந்தன, பொறிக் குலம், மழைக் குலம் தீய. |
கூய்த்தரும்தொறும் தரும்தொறும் - படைத்தலைவர்கள் கூவி அழைக்கும் போதெல்லாம்; வெம் தானைக் குழுவின் நீத்தம் - கொடிய அச்சேனைக் கூட்டத்தின் பெருக்கம்; வந்து வந்து - மேன்மேலும் வந்து; இயங்கிடும் இடன் இன்றி நெருங்க - அவை சஞ்சரிப்பதற்குப் போதிய இடம் இல்லாமல் நெருங்கி நிற்க; காய்த்து அமைந்த வெம் கதிர்ப்படை - உலைக் களத்தில் காய்ச்சிக் கூராக வடித்த கொடிய ஒளியுள்ள ஆயுதங்கள்; ஒன்று ஒன்று கதுவி தேய்த்து - ஒன்றோடொன்று பற்றி உராய்ந்து, தேய்த்தலினால்; (அவற்றில் உண்டான); பொறிக் குலம் மழைக்குலம் தீய எழுந்தன - நெருப்புப் பொறிகளின் கூட்டம், மேகக்கூட்டங்களைச் சுட்டெரிக்க மேற்கிளம்பிச் சென்றன. இது சேனாவீரர்களின் பெருக்கத்தையும், வீரர்கள் ஏந்திச் சென்ற போர்ப்படைக் கருவிகளின் மிகுதியையும் குறிப்பிடுகின்றது. (12) |