5613. | பண் மணிக்குல யானையின் புடைதொறும் பரந்த ஒண் மணிக் குலம்மழையிடை உரும் என ஒலிப்ப, கண் மணிக் குலம்கனல் எனக் காந்துவ; கதுப்பின் தண் மணிக் குலம்மழை எழும் கதிர் எனத் தழைப்ப.* |
பண் மணிக்குல யானையின் - அழகு செய்யப்பட்ட உயர்ந்த இலக்கணங்கள் அமைந்த யானைகளின்; புடை தொறும் பரந்த ஒண் மணிக்குலம் - இருபக்கங்களிலும் பரவியுள்ள அழகிய மணிகளின் கூட்டம்; மழையிடை உரும் என ஒலிப்ப - மேகங்களில் தோன்றும் இடியோசை போன்று பேரொலி செய்ய; கண்மணிக்குலம் கனல் எனக் காந்துவ - கண்ணின் மணியாகிய விழிக்கூட்டம் கனலே போல ஒளி வீசின; கதுப்பின் தண் மணிக்குலம் - கன்னங்களில் அணியப் பெற்ற குளி்ர்ந்த மணியாகிய முத்துக்களின் கூட்டம்; மழை எழும் கதிர் என தழைப்ப - மேகத்தினின்று வெளிப்படும் சந்திரனே போன்று நிறைந்து விளங்கின. குலம் என்னும்சொல் முதலில் உயர்வு என்னும் பொருளிலும் பின்னே கூட்டம் என்ற பொருளிலும் வந்தது. மணி என்னும் சொல் முதலில் உயர்வு என்னும் பொருளில் வந்தது. (மணியான பிள்ளை என்னும் உலக வழக்கை எண்ணுக.) பின்னே இரத்தினம், முத்து என்ற பொருள்களில் வந்தது. (13) |