அரக்க வீரரைச்சுற்றத்தார் தடுத்து இரங்குதல்

5614.

தொக்கதுஆம் படை, சுரி குழல் மடந்தையர்,
                             தொடிக் கை
மக்கள், தாயர்,மற்று யாவரும் தடுத்தனர், மறுகி
'ஒக்கஏகுதும், குரங்கினுக்கு உயிர் தர; ஒருவர்
புக்கு மீண்டிலர்'என்று, அழுது இரங்கினர், புலம்பி.

     தொக்கது ஆம்படை - அவ்வாறு திரண்டதான படைவீரர்களை; சுரி
குழல் மடந் தையர் -
சுருண்ட கூந்தலை உடைய பெண்களும்; தொடிக்கை
மக்கள் -
வளையலை அணிந்த கைகளை உடைய மக்களும்; தாயர், மற்று
யாவரும் -
அவரது அன்னைமார்களும், மற்றைய சுற்றத்தினரும்; மறுகி,
தடுத்தனர் -
மனங்கலங்கி, (போர் செய்யச் செல்வதை முதலில்) தடுத்துச்
சொல்லி; புக்கு ஒருவர் மீண்டிலர் - (தம் சொல்லைக் கேட்காமல் செல்லும்
வீரர்களை நோக்கி) 'இது வரை அந்தக் குரங்கோடு போருக்குச் சென்றவர்
ஒருவரும் திரும்பினாரில்லை; குரங்கினுக்கு உயிர்தர - அந்தக் குரங்குக்கு
உயிரைத் தர வேண்டுமானால்; ஒக்க ஏகுதும் - நாம் எல்லோரும் ஒருமிக்கச்
செல்வோம் ! என்று - எனச் சொல்லி; அழுது புலம்பி இரங்கினர் -
கோவென்று கதறி அழுது வருந்தினார்கள்;

     ஒத்த நிலையில்பழகும் மனைவி, தாம் காப்பாற்ற வேண்டிய மக்கள்,
தம்மைக் காப்பாற்றிய முதிர்ந்த தாயர் முதலிய சுற்றத்தார் இரங்கித் தடுக்கும்
நிலையும், 'நாம் அனைவரும் ஒரு சேர இறப்போம்' என்னும் ஒற்றுமை மிகுந்த
பற்றுதலும் உருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. படை வீரர்களைத் தடை செய்தது
அபசகுனமாகும் எனவும் அதுவே, அவர்களது மரணத்தை முன் கூட்டித்
தெரிவிக்கின்றது எனவும் கருத்துரைப்பார் உளர்.                   (14)