ஐவரும் தம்படையோடுசெல்லல் 5615. | கை பரந்துஎழு சேனைஅம் கடலிடைக் கலந்தார்; செய்கைதாம்வரும் தேரிடைக் கதிர் எனச் செல்வார்- மெய் கலந்த மாநிகர்வரும் உவமையை வென்றார், ஐவரும், பெரும் பூதம் ஓர் ஐந்தும் ஒத்து அமைந்தார். |
ஐவரும் பெரும்பூதம் ஓர் ஐந்தும் ஒத்து அமைந்தார் - அந்த ஐந்து சேனைத்தலைவர்களும், ஐந்து பூதங்களும் ஒன்று சேர்ந்தன போல விளங்கியவர்களாய்; கை பரந்து எழு சேனை அம் கடலிடைக் கலந்தார் - பக்கங்களில் பரவிக் கிளம்பிய சேனைகளாகிய அழகிய கடலின் நடுவில் போய்ச் சேர்ந்து கொண்டனர்; தாம் - அவர்கள்; செய்கை வரும் தேரிடைக் கதிர் என - அற்புதமான வேலைப்பாடமைந்த தேர்மீது வருகின்ற சூரியனைப் போல; செல்வார் - விரைந்து செல்வாராயினர்; மெய் கலந்த மா நிகர்வரும் உவமையை வென்றார் - இரு வகை உடல் பெற்ற நரசிம்மத்தை ஒப்பாகச் சொல்லுகின்ற உவமைத் தன்மையை வென்று விளங்கினர். உலகஇயக்கத்துக்குப் பஞ்ச பூதங்களும் ஒன்று சேர்தல் போலப் போர்த்தொழில் நிகழ்த்துவதற்கு இந்த ஐந்து சேனைத் தலைவர்களும் ஒன்று சேர்ந்தனர் என்பது கருத்து. பின்னே ஒரு பாடலில் (5664) பஞ்ச சேனாபதியர்க்கு வஞ்சனை சான்ற ஐம்புலன்கள் உவமையாக வருவதை ஒப்பிட்டு உணர்க. அடுத்த பாடலில் இவர்க்கு பஞ்சேந்திரியங்கள் உவமையாக வருவதையும் காண்க. சினக் கொடுமையால் நரசிங்கத்தை வென்றனர் என்பது கருத்துப் போலும். மெய் கலித்தல் - வடிவிலே இரு வகை உடல்கள் சேர்தல். மா - இங்கே (நர)சிங்கம். (15) |