வாசவன்வயக் குலிசமும், வருணன் வன் கயிறும், ஏசு இல்தென்திசைக்கிழவன்தன் எரி முனை எழுவும், ஈசன் வன் தனிச்சூலமும், என்று இவை ஒன்றும் ஊசி போழ்வதுஓர் வடுச் செயா, நெடும் புயம் உடையார்.
வாசவன் வயகுலிசமும் - இந்திரனுடைய வெற்றிதரும் வச்சிராயுதமும்; வருணன் வன் கயிறும் - வருணனுடைய வலிய பாசாயுதமும்; ஏசு இல் தென் திசைக் கிழவன் தன் எரிமுனை எழுவும் - குற்றமற்ற தெற்குத்திக்குக்குரிய எமனது நெருப்பை முனையில் கொண்ட தண்டாயுதமும்; ஈசன் வன் தனிச் சூலமும் - சிவபெருமானது வலிய ஒப்பற்ற சூலாயுதமும்; என்று இவை ஒன்றும் - என்று பெருமையாய்ச் சொல்லக் கூடிய இவை ஒன்றும்; ஊசி போழ்வது ஓர் வடுச் செயா - ஊசி ஊடுருவிச் செல்லக் கூடிய (மிகச் சிறிய) ஒரு வடுவையேனும் செய்ய மாட்டாத; நெடும் புயம் உடையார் - பெரிய தோள்களை உடையவர் (படைத் தலைவர்) (17)