5622.

'பால் நிறுத்து அந்தணன் பணியன் ஆகி, நின்
கோல் நினைத்திலன்' என, உலகம் கூறலும்,
நீல் நிறத்துஇராவணன் முனிவு நீக்குவான்,
காலனை,காலினில், கையில், கட்டினார்.

     அந்தணன் பணியன்ஆகி - முதல் அந்தணனாகிய பிரம்ம தேவனது
கட்டளையின் படி நடப்பவனாய்;  பால்  நிறுத்து -  (உயிர்களின்) விதியைச்
சீர் தூக்கிப் பார்த்து; நின் கோல் நினைத்திலன் - (இலங்கையில்
உள்ளவர்க்கும் அவரவர் விதியின்படி ஆயுட் காலத்தை நடப்பிப்பவனாய்)
இலங்கை உனது கோலுக்கு உட்பட்டது என்பதை நினைத்தானில்லை; என
உலகம் கூறலும் நீல் நிறத்து இராவணன் முனிவு நீக்குவான் -
என்று
உலகம் சொல்லுதலும் (அது கேட்ட) கருநிறத்து இராவணனது கோபத்தைப்
போக்கும் பொருட்டு; காலனைக் காலினில் கையில் கட்டினார் - யமனையும்கால்களிலும் கைகளிலும் கட்டிச் சிறையிலே வைத்தவர்கள்
(இவர்கள்).

     காலன் இராவணனதுமேலாண்மையை மதிக்காமல், பிரமன்
கட்டளைக்குப் பணிந்தவனாய், ஊழ்வினைப் படியே தன் பணியைச் செய்தவன்
அதனால், அந்த யமனுடைய கைகால்களைப் பஞ்சசேனாபதியர் கட்டினார்கள்
என்பது கருத்து. பால் - ஊழ்.                                  (22)