5623.

மலைகளைநகும் தட மார்பர்; மால் கடல்
அலைகளை நகும்நெடுந் தோளர்; அந்தகன்

கொலைகளைநகும் நெடுங் கொலையர்; கொல்லன்
                                      ஊது
உலைகளை நகும்அனல் உமிழும் கண்ணினார்.

     மலைகளை நகும் தடமார்பர் - (அவர்கள்) மலைகளைஏளனம்
செய்யும் பரந்த மார்பை உடையவர்கள்; மால்கடல் அலைகளை நகும்
நெடும் தோளர் -
பெரிய கடலின் அலைகளைப் பழிக்கும் நீண்ட
தோள்களை உடையவர்கள்; அந்தகன் கொலைகளை நகும் நெடும்
கொலையர் -
யமனுடைய கொலைத் தொழிலைப் பழிக்கும் பெரும் கொலைத்
தொழிலை உடையவர்கள்; கொல்லன் ஊது உலைகளை நகும் அனல்
உமிழும் கண்ணினார் -
கொல்லன் (துருத்தி கொண்டு) ஊதும்
உலைக்களங்களைப் பார்த்து இகழ்ந்து (சிவப்பன போல) நெருப்பை கக்குகின்ற
கண்களை உடையவர்கள்.

     இந்த அரக்கவீரர்களுடைய மார்பு முதலியவை மலை முதலியவற்றினும்
விஞ்சியவை என்பது கூறப்பட்டது. விதிப்படி ஆயுள் முடிந்தோரை மட்டுமே
கூற்றுவன் கொல்வான்; இராவணனின் படைத்தலைவர்கள் எவரையும்
கொல்வர். ஆகையால், யமனுடைய கொலைத் தொழிலைப் பழிப்பவர் (ஏளனப்
படுத்துவோர்) ஆனார், பஞ்ச சேனாபதியர். தாடகை பற்றி இராமனிடம்
விசுவாமித்திரர் கூறியபோது, விதி முடிந்தது என்ற ஒரே தருமத்தை
நோக்குவான் 'கூற்றுவன்; மூக்கில் ஓர் அயல் மணம் முகர்ந்தால் எதிர்ப்படும்
எதனையும் கொன்று தீர்ப்பாள் இவள். இவளைப் போல் உயிரினம் தின்னும்
ஒரு கூற்றும் (கம்ப. 380) உண்டோ என்று சொல்லிய கருத்து நினையத்தக்கது.
                                                      (23)