5624.

தோல்கிளர் திசைதொறும் உலகைச் சுற்றிய
சால் கிளர்முழங்கு எரி தழங்கி ஏறினும்,
கால் கிளர்ந்துஓங்கினும், காலம் கையுற
மால் கடல்கிளரினும், சரிக்கும் வன்மையார்.

     காலம் கை உற -யுக முடிவுநெருங்கிடும் போது; சால் கிளர்
முழங்கு எரி -
மிகுந்து கிளர்ந்து முழக்கம் செய்யும் ஊழிக் காலத்தீ;
உலகைச் சுற்றிய -
உலகம் முழுவதையும் (எரிக்கும்படி) சூழ்ந்து கொள்ளும்
பொருட்டு; தோல் கிளர் திசை தொறும் - யானைகள் விளங்கும் எட்டுத்
திக்குகளிலும்; தழங்கி ஏறினும் - பேரொலியோடு மேற்கிளம்பினும்; கால்
கிளர்ந்து ஓங்கினும் -
ஊழிக் காற்று மேற்கிளம்பி வீசினாலும்; மால் கடல்
கிளரினும் -
பெருங்கடல்கள் ஒன்றுசேர்ந்து பொங்கி எழுந்தாலும்; சரிக்கும்
வன்மை யார் -
(அவற்றை யெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல்)
இயங்குகின்ற ஆற்றல் உடையவர்கள். (இவர்கள்).

      'தோல் - யானை, சரித்தல் - இயங்குதல்.                   (24)