5634.

வார் மதக்கரிகளின் கோடு வாங்கி, மாத்
தேர் படப்புடைக்கும்; அத் தேரின் சில்லியால்,
வீரரை உருட்டும்;அவ் வீரர் வாளினால்,
தாருடைப்புரவியைத் துணியத் தாக்குமால்.

     வார் மதக்கரிகளின் - நீண்ட மத யானைகளின்;கோடு வாங்கி -
கொம்புகளை முறித்தெடுத்து; மாத்தேர் படப்புடைக்கும் - பெரிய தேர்கள்
அழிய அடிப்பான்; அத்தேரின் சில்லியால் வீரரை உருட்டும் -
அழிந்த தேர்களின் சக்கரங்களைக் கொண்டு, போர் வீரர்களை உருண்டு
விழச் செய்வான்; அவ்வீரர் வாளினால் - உருண்டு வீழ்ந்த அரக்கவீரரது
கைவாள்களைக் கொண்டு; தார் உடைப் புரவியை துணியத்தாக்கும் -
கிண்கிணி மாலை பூண்ட குதிரைகளைத் துணிபட்டு விழும்படி வெட்டுவான்.

     அனுமன், தான்அழித்த பொருள்களையே ஆயுதங்களாகக் கொண்டு
அப்படைகளைக் கொன்றான் என்பதாம். அனுமன் இதேபோலப் போர்
செய்தை 5579 ஆம் பாடலிலும், அடுத்த 5635ஆம் பாடலிலும் காணலாம்.
                                                          (34)