5639.

தீ உறுபொறியுடைச் செங் கண் வெங் கைமா,
மீ உற, தடக்கையால் வீரன் வீசுதோறு,
ஆய் பெருங்கொடியன, கடலின் ஆழ்வன,
பாயுடை நெடுங்கலம் படுவ போன்றவே.

     உறு தீப் பொறிஉடை - மிக்க நெருப்புப் பொறிகளை உடைய;
செங்கண் வெங்கை மா -
சிவந்த கண்களைக் கொண்ட கொடிய
யானைகளை; வீரன் தடக் கையால் மீ உற வீசு தோறு - அனுமன் தனது
பெரிய கைகளைக் கொண்டு ஆகாயத்தின் மீது
 வீசி எறியுந் தோறும்;ஆய்
பெருங் கொடியன -
சிறந்த பெரிய கொடிகளை உடையவாகி; கடலின்
ஆழ்வன -
கடலில் வீழ்பவை; பாய் உடை நெடும் கலம் படுவ போன்ற -
பாய் மரங்களை உடைய நெடிய மரக்கலங்கள் (கடலில்) மூழ்குவனவற்றை
ஒத்திருந்தன.

     கொடியோடு யானை கடலில் ஆழ்வது, பாய் மரத்தோடு மரக்கலம்
கடலில் மூழ்குவதை ஒத்திருந்தது. 'பண்ணார் களிறே போல் பாயோங்குயர்
நாவாய்' (சீவக சிந்தாமணி 2793) எனப் பாய்மரக் கப்பல்கள் கொடி தாங்கிய
களிறுபோல் தோற்றம் அளிப்பதாகத் திருத்தக்க தேவரும் பாடினார்.   (39)