5644. | பிறைக்கடை எயிற்றின, பிலத்தின் வாயின, கறைப் புனல்பொறிகளோடு உமிழும் கண்ணன, உறைத் தபுபடையின, உதிர்ந்த யாக்கைகள், மறைத்தன, மகரதோரணத்தை, வான் உற. |
பிறைக்கடைஎயிற்றின - பிறையின் நுனி போன்றுவளைந்த பற்களை உடையவனவும்; பிலத்தின் வாயின - குகைகளைப் போன்ற வாய் உடையனவும்; கறைப் புனல் பொறிகளோடு உமிழும் கண்ணன - கறைபடிந்த இரத்தமாகிய நீரை, நெருப்புப் பொறிகளோடு உமிழ்கின்ற கண்கள் கொண்டனவும்; உறைதபு படையன - உறைகளினின்று நீக்கி எடுத்த ஆயுதங்கள் பொத்துக் கொள்ளப் பெற்றனவுமான; உதிர்ந்த யாக்கைகள் - உயிரொழிந்து கீழே விழுந்துள்ள பிணக் குவியல்கள்; வான் உற - ஆகாயத்தை அளாவ; மகர தோரணத்தை மறைத்தன - (அனுமன் இருந்த) மகரத்தின் வடிவத்தை அந்தத் தோரண வாயிலை மூடிவிட்டன. அனுமனால் இறந்தஅரக்கர்களின் மிகுதி கூறப்பட்டது. பிணங்கள், மிகுதியாகத் திரண்டிருந்ததனால் தோரண வாயில் மறைந்தது என்க. (44) |