5645.

குன்று உள;மரம் உள; குலம் கொள் பேர் எழு
ஒன்று அல, பலஉள; உயிர் உண்பான் உள;
அன்றினர் பலர்உளர்; ஐயன் கை உள;
பொன்றுவதுஅல்லது, புறத்துப் போவரோ ?

     குன்று உள -(அனுமன்எடுத்துத் தாக்குவதற்கு) மலைகள் உள்ளன;
மரம் உள -
மரங்களும் உள்ளன; குலம் கொள் பேர் எழு, ஒன்று அல
பல உள -
சிறப்புப் பொருந்திய பெரிய எழுக்களும் (என்ற இவை) பலவாக
உள்ளன; உயிர் உண்பான் உள - இப்படைகள் உண்பதற்கு உயிர்களும்
உள்ளன; அன்றினர் பலர் உளர் - சினந்து போர் செய்யுமாறு அரக்க வீரர்
பலரும் உள்ளனர்; ஐயன் கையினில் பொன்றுவது அல்லது -
(அப்பகைவர்கள்)
 அனுமன் கையால் இறந்துபடுவது அல்லாமல்; புறத்துப்
போவரோ -
வெளியே தப்பிப் போவார்களோ ? (மாட்டார் என்றபடி)

    அந்த அரக்கர்வீரர் இறந்தொழிவதற்கு வேண்டியன யாவும்
நிரம்பியிருத்தலால் அவர்கள் யாவரும் இறந்தொழிவது அன்றி அவர்களுக்கு
வேறு வழி இல்லை என்று கூறப்பட்டது. அன்றினர் - பகைவர்        (45)