5660.

கால் நிமிர் வெஞ் சிலை கையின் இறுத்தான்;
ஆனவர் தூணியும்,வாளும், அறுத்தான்;
ஏனைய வெம் படைஇல்லவர், எஞ்சார்,
வானிடை நின்று,உயர் மல்லின் மலைந்தார்.

     கால் நிமிர்வெஞ்சிலை கையின்  இறுத்தான் - இருமுனைகளோடு
ஓங்கிய கொடிய வில்லை (அனுமன்) தனது இரு கைகளால் ஒடித்து; ஆனவர்
தூணியும் வாளும் அறுத்தான் -
அவர்களுடைய அம்புப் புட்டில்களையும்
வாள்களையும் சின்ன பின்னப்படுத்தினான்; ஏனைய வெம்படை இல்லவர் -
வேறு,
 போருக்குரிய ஆயுதம்இல்லாதவரான அரக்கர் இருவரும்; எஞ்சார் -
பின் வாங்காதவர்களாய்; வானிடை நின்று - ஆகாயத்திலிருந்து கொண்டே;
உயர்மல்லின் மலைந்தார் - சிறந்த மற் போரினால் (அனுமானோடு)
பொருதார்கள்.

     கால் -வில்லின் நுனிகளைக் குறிக்கும். 'ஒரு தனு இரு கால் வளைய'
என்ற திருவெழுகூற்றிருக்கையில் 'கால்' வில் நுனியைக் குறித்தது காண்க.
(திருஞானசம்பந்தர் முதல் திருமுறை).                            (60)