5662.

தாம்பு எனவாலின் வரிந்து, உயர் தாளோடு
ஏம்பல் இலார்இரு தோள்கள் இறுத்தான்;
பாம்பு எனநீங்கினர், பட்டனர் வீழ்ந்தார்-
    
ஆம்பல்நெடும் பகைபோல் அவன் நின்றான்.

     ஏம்பல் இலார் -சிறிதும்சலியாது போர் செய்த அவ்வரக்கர்
இருவருடைய; உயர் தாளோடு இரு தோள்கள் - நீண்ட
 கால்களையும்
இரண்டுதோள்களையும்; வாலின் - தனது வாலினால்; தாம்பு
என வரிந்து -
தாம்புக் கயிற்றால் கட்டுவது போலக்கட்டி; இறுத்தான் -
(அனுமன்) ஒடித்தான்; பாம்பு என நீங்கினர் - இராகு கேதுக்கள் என்னும்
பாம்புகள் போல் நீங்கியவர்களாய்; பட்டனர் வீழ்ந்தார் - இறந்து கீழே
வீழ்ந்தனர்; அவன் - அந்த அனுமன்; ஆம்பல் நெடும் பகை போல்
நின்றான் -
அல்லிக்கு நெடும் பகைவனான  சூரியன் போன்று ஒரு வித
இடையூறும் இல்லாமல் நின்றான்.

     முன்பாட்டில்அரக்கர் இருவரைப் பாம்பாகவும் அனுமனை
அருக்கனாகவும் (சூரியனாகவும்) செய்த கற்பனையின் வளர்ச்சி இப்பாடலில்
காணப்படுகிறது. அரக்கர் தலைவர் இருவரும் பாம்புகளாகவும் அனுமன்
கதிரவனாகவும் கூறப்பட்டனர். சூரியனைக் கண்ட ஆம்பல் மலர் கூம்பிச்
சோரும் ஆதலால் சூரியனை ஆம்பலுக்குப் பகைவன் என்பது கவிமரபு.
ஞாயிறு கண்ட ஆம்பல் அழியும் 'ஓம்பு திங்களும் வந்து சுடர்கண்ட,
ஆம்பலாய் மலர்க் காடொத்தழிந்ததே' (சீவக -2336)               (62)