5663.

நின்றனன்ஏனையன்; நின்றது கண்டான்;
குன்றிடை வாவுறுகோள் அரி போல,
மின் திரி வன்தலைமீது குதித்தான்;
பொன்றி, அவன்,புவி, தேரொடு புக்கான்.

     ஏனையன்நின்றனன் - ஐவருள் மீதியாய்இருந்த ஒருவன் எதிர்த்து
நின்றான்; நின்றது, கண்டான் - அவ்வாறு தன்னை எதிர்த்து நின்றதைக்
கண்டவனாகிய அனுமன்; குன்று இடை வாவுறு கோள் அரி போல -
குன்றினிடத்துத்தாவும் வலிய சிங்கம் போல; மின் திரி வன் தலை மீது
குதித்தான் -
ஒளி வீசுகின்ற (அரக்கனது) வலிய தலையின் மேல் குதித்தான்;
அவன் பொன்றி தேரொடும் புவி புக்கான் -
அந்த அரக்கன் இறந்து தன்
தேரோடு பூமியில் அழுந்தினான்.   (63)