5665. 

நெய் தலைஉற்ற வேற் கை நிருதர், அச் செருவில்
                                நேர்ந்தார்,
உய்தலை உற்றுமீண்டார் ஒருவரும் இல்லை;
                                உள்ளார்,
கை தலைப் பூசல்பொங்கக் கடுகினர்; காலன்
                                உட்கும்
ஐவரும் உலந்ததன்மை, அனைவரும் அமையக்
                                கண்டார்.

     அச் செருவில்நேர்ந்தார் - அப்போரில் போர்செய்ய அனுமனை
எதிர்த்து வந்தவர்களான; நெய்தலை உற்ற வேற்கை நிருதர் - நெய்யை
முனையில் பூசப்பெற்ற வேல் ஏந்திய கைகளை உடையவராய அரக்கர்கள்;
உய்தலை உற்று மீண்டார் ஒருவரும்
 இல்லை - தப்பிப் பிழைத்துத்
திரும்பினோர் ஒருவரும் இல்லை; உள்ளார் அனைவரும் - அங்குப்
போரிடாமல் மறைத்து பிழைத்திருந்த அரக்கர் அனைவரும்; காலன் உட்கும்
ஐவரும் உலந்த தன்மை -
யமனும் அஞ்சும் பஞ்ச சேனாபதிகள் அழிந்து
போனதை; அமையக் கண்டார் - நேரில் கண்டறிந்து; கைதலைப் -
போர்க்களத்தினின்று; பூசல் பொங்க - பேராரவாரம் மிகும்படி; கடுகினர் -
(இராவணனிடம்) விரைந்து ஓடினார்கள்.

     போரிடாமல்மறைந்து பிழைத்திருந்த அரக்கர் (உள்ளார் அனைவரும்)
பஞ்ச சேனாபதிகள் இறந்ததை நேரில் கண்டார்கள். செய்தி சொல்ல
இராவணனிடம் விரைந்தனர் என்க. கை - சேனைப் பகுதி. தலை - இடம்.
கைதலை - போர்க்களம்.                                      (65)